Tuesday, February 10, 2009

சிநேகம் தெரியுதடி..!

இதற்கு முன்னே பார்த்ததே இல்லை

என்பது போல் என்னை கடந்து விட்டு,

கடந்த பின் "களுக்" கென்று சிரிக்கையில்

தெரியுதடி உனக்கும் எனக்குமான சிநேகம்!


மஞ்சத்தில் உறங்கும் என்னவளின்

முகத்தை சுடுவானோ அம்மாலைச்

சூரியன் என்று மெல்ல வந்துஜன்னலின்

திரை நகர்த்துகையில் தெள்ளமாய்

தெரியுதடி நமக்கிடையேயான சிநேகம்!


இந்தக் கேள்விக்கு இந்த பதில் தான்

இவன் சொல்லுவான் என்று முன்னமே யூகித்து

அந்த பதிலையே நானும் சொல்லுகையில்

உள்ளூர மெல்லச் சிரித்துக் கொண்டே

கள்ளமாய் பார்க்கும் ஒரு பார்வையில் புரியுதடி

உனக்கும் எனக்கும் உள்ள சிநேகம்!


ஒருசிறு தவற்றுக்கு படுகோபமாய்

உன்முகம் வாடும்வரை திட்டிவிட்டு

மெல்லமாய் உன்முகம் கண்டு ரசிக்கையில்

செல்லமாய் "களுக்"கென்று சிரிக்கையில், நகைக்கையில்

தெரியுதடி நமக்குண்டான சிநேகம்!  


எத்தனையோ கேள்விகள்! விதவிதமாய்...

என்னைத்தவிர வேறு ஒருவன் இருக்கலாமோ? என்றறிய!

எல்லாவற்றுக்கும் சாமர்த்தியமாய் பதில் சொல்லி

என்னை ஏமாற்றி விட்டதாய் வரும் ஒரு உள்ளார்ந்த

சிரிப்பில் உதடுகள் துடித்து உனை காட்டிக்கொடுக்கும்

பொழுதுகளில் உணர்ந்தேனடி நமக்கான சிநேகத்தை!


கடற்கரையில் என் காலடிச்சுவடுகளில்

கால் பதித்து எனை தொடர்ந்தே வந்து

திடீரென்று எனைத் தள்ளி சிரித்து என்

மார்பில் விழுந்து சில நொடிகள் அசையாது

பார்க்கும் பார்வையில் தெரியுதடி

உனக்கும் எனக்குமான சிநேகம்!


எந்த நேரம் நான் எதை கேட்பேன்

என்பதை தெள்ளமாய் அறிந்து,

அந்த நேரம் அதை எடுத்துக்கொண்டு,

“ஐயோ! மறந்துவிட்டேனே!” என்று

சிறிதுநேரம் செல்லமாய் ஊடி, பின் அதை

அளித்து புன்னகைக்கையில், அறிந்தேனடி

என்மீதான உன் சிநேகத்தை!


திடீரென பின்னாலிருந்து கண்களை மூடிஎனை

திளைக்கச் செய்ய முயற்சித்து - எனை தொட்டதும்

நாணி மெல்ல நடுங்கி கள்ளமாய் உனை காட்டிக்

கொடுக்கும் கரங்களில் தெரியுதடி நம் சிநேகம்..!


பதுங்கியென் பின்னே வந்தென் கண்மூடுவாய்..!

உன் அசைவுகள் அறிவேன் உன் வாசமும் அறிவேன்..!

இருந்தும் தவறாய் இன்னொரு பெயரை உச்சரிப்பேன்..!

சிணுங்கி முன்வந்து ஊடிக் கிள்ளுகையில்.. வலி

தெரியவில்லை.. தெரிந்தது நம் சிநேகம்..!


காரணமில்லாத வம்புகள் செய்வாய்..!

கடுகடுவென வள்ளுவன் சொன்ன

சுடாஅச் சுடுசொல் சொல்வாய்..!

சொல்லி முடித்தென் உள்ளத்தாழம்

கள்ளமாய் அளக்கும் கண்களில்

தெரியுதடி கணக்கில்லா காதல்..!  


எல்லோரும் நடம் பயின்றனர்..

என்னவளும் நடம் பயின்றாள்..!

அவளருகில் நான் ஒதுங்கி

அழகின் அழகை ரசித்திருந்தேன்..!

மானென துள்ளும் ஒரு அசைவில்

தானொரு அடிகூடுதலாய் துள்ளி

மெல்ல தவறி மேனி திடுக்கிட

நல்ல நடிகையே நளினமாய் உன்

தூரிகைக்கரங்கள் என் தோள்களை

தொட்டதும் தெள்ளமாய் தெரிந்ததடி

உள்ளார்ந்த ஒரு சிநேகம்..!