Thursday, September 3, 2009

மகிழ்ந்த சில பொழுதுகள்..! -1

கால்நூற்றாண்டுகள் கடந்திருந்தது..!

அவள் "இது வேண்டும்" என்றோ

"மகிழ்ந்தேன்" என்றோ கூறக் கேட்டதில்லை.!

இன்று முதன்முதலாய் அவளுக்கென்றொரு பரிசளித்தேன்..!

பெற்றுக்கொண்டாள்..!

பெருமிதமாய் பார்த்தாள்..!

கண்கள் மெல்ல ததும்பின..!

உதடுகள் கொஞ்சம் துடித்தன..!

நெஞ்சோடு அணைத்தாள்..!

நெற்றியில் முத்தமிட்டாள் உச்சி முகர்ந்து.!

நெடுநேரமாய் மீண்டும் மீண்டும் வந்து போயின அச்சிறு மணித்துளிகள்..!

அவள் "மகிழ்ந்தேன்" எனக் கூறும் வார்த்தைகளுக்கு முன்னே

மற்றெல்லா காதலும் எச்சமாய் பட்டது தாயின் முன்னே..!

மழலையாய் மீண்டும் மனதுக்குள் உச்சரித்தேன் "அம்மா"..!

அப்பாவாய் எனக்கு அகவை ஒன்று..!

முதன் முதலாய் பூமியில் தடம் பதித்திருந்தாள்..!

நானும் முதன் முதலாய் புதுப்பட்டம் பெற்றேன்..!

சிற்சில தடைகள் கடந்து வந்தாள்..!

சிறகுகள் கட்டிப்பறந்தேன் ஒவ்வொரு முறையும்..!

முதல் மொழி.. முதல் சைகை..முதல் பிறழல்..முதல் தவழல்..

அத்தனைக்கும் உள்ளூர மகிழ்ந்திருந்தேன்..! - இன்று

முதல் நடையோடு முதலாம் ஆண்டில் தடம்

பதிக்கும் எனதருமை மகளே...நீ வாழிய பல்லாண்டு..!!

விடியலாய் வருவாயா..!?!

ஏதோ காரணங்களுக்காக நடுநிசியில் விழிக்கிறேன்..!

எஞ்சிய இரவெலாம் எண்ணங்களில் நீ நிறைகிறாய்..!

உனக்கான என் காதல் இருளிலேயே உழல்வதுபோல்

யாருமறியாமல் நகர்கின்றன அப்பொழுதுகள்...!

விடியலாய் வருவாயா நீ!

கதறியது வானம்..!

முகம் கறுத்து..

ஈனஸ்வரத்தில் இடித்து..

மழைக்கண்ணீர் வடித்து..

மண்ணைக் கட்டிக்கொண்டு..

மாரடித்துக் கதறியது வானம்..!

இன்னொரு நல்லவனுக்கு..

இன்னுமொரு முறை..

துன்பம் நேர்ந்திருக்கலாம்..!

Wednesday, August 12, 2009

நிராகரிப்"பூ"!

பிணத்தை அலங்கரித்தன "பூக்கள்"! 
படுநியாயமாய் பட்டது அவனுக்கு..! 
அவனை நிராகரித்த பூவை 
எங்கோ பூவை அணிந்துகொண்டிருக்க...!

Thursday, August 6, 2009

விதி..!

எவனோ மதுவுண்டான்...! எங்கேயோ விபத்தானது..!
இங்கே ஒரு மழலை அனாதையாய்....
படைத்தவனாய் படைக்கப்பட்டு இயற்கை 
இன்னுமொரு முறை திட்டப்படுகிறது..!

-MaYa

Sunday, July 19, 2009

மழலையாய் நான்..!

விளையாடிய மழலையை கண்டதும் எனை அறியாது விளைந்த புன்னகையை விளக்க தெரியாத மழலையாய் நான்..!

இறக்கையில் சுமைகளா..?

பறக்க யத்தனித்த பின் 
இறக்கையில் சுமைகளா..?
உதறித் தள்ளடா நீ - இனி
உயரப் பறப்போம் வா..!

Monday, July 13, 2009

சாதிக்கப் பிறந்தவன் நான்..!

சாதிக்கப் பிறந்தவன் நான்..!
உனது எல்லைக்கோடுகள்
எனது திறந்த மனவெளியில்
மணல்வரிகளாய் சரிந்தழிதல் காண்..!
நீ இட்ட தடைச்சுவர்கள்
எனது மூச்சுக்காற்றில்
வழிகளாய் பரிணமித்தல் காண்..!

நினைவுகளில்...

விடியலுக்கு முன்னே விடிகின்றன என் இரவுகள்..!!

நினைவுகளில் நீ விதைத்துச் சென்ற சூரியன்களால்....

ஒரு புள்ளி மட்டும்..

சிறு வட்டமிட்டாய் மணலில், "இவ்விடம் எனது" என்றாய்.
ஒரு புள்ளி மட்டும் வைத்தேன் நான்! - இவ்வுலகமே எனதென்றேன்..!
"அடே முட்டாள்" - என்றாய் நீ!. அமைதியாய் புன்னகைத்தேன் நான்!
அதற்குப்பின் நீயும் நானும் விளையாடியதாய் எனக்கு ஞாபகம் இல்லை.

Friday, June 19, 2009

"அமுதம் வீழுதோ!?! அமிலம் வீழுதோ?!"

"அமுதம் வீழுதோ!?! அமிலம் வீழுதோ?!"

என இனியொரு இனம் அழுவதோ?!

மதிக்கப் பழகடா மாதவ இயற்கையை..!!

Thursday, June 18, 2009

நீ வராத நாட்கள்..வருகின்றன வலியோடு!

நீ வராத நாட்கள் அஸ்தமிப்பதில்லை

எச்சமாய் தொக்கி நிற்கின்றன..!

ஒளியாய் பட்டதெல்லாம் வெறுமையாய்..

இருளாய் பட்டதெல்லாம் பாலையாய்..

உணர்வுகள் அத்தனையும் தகிப்பும் தவிப்புமாய்..

வார்த்தைகளில் அகப்படாத வலியின் கொடூரமாய்..

வதந்தியிலாவது உன்னோடு சேர்த்து பேசப்பட மாட்டேனா? - என ஏக்கம்..! 

எத்தனை பேர் சொன்னாலும் உணர்கையில் புதுமையாய்.. இந்த வலி!

வானம் வடித்த கண்ணீர்!

வானம் வடித்த கண்ணீரில்

வயிறு நிரப்புதாம் பூமி..!

வடிந்த நீரை வாரி இறைக்க..

வியர்வையைத் தின்று

வேட்டியானதாம் கோவணம்..!

ஈர மணலில்...

"ஈர மணலில் சித்திரம் ஆயிரம்"

செதுக்கிய மழலையில்

அழித்த அலையில்

அலையுடன் கோபித்த அழகில்...

அத்தனையிலும் நீ!

Saturday, May 30, 2009

உன் நினைவுகள் அடர்ந்த காடுகளில்..

உன் நினைவுகள் அடர்ந்த காடுகளில் - "நான்"

நகரம் மகரமாக துள்ளித் திரிகிறேன் - பின்

னகரம் மகரமாகாமல் - அயர்ந்து சரிகிறேன்.

னகரம் னகரமாகவே....! கண்களும் இதயமும்

நீர் ததும்பியும் பாலையாய் - கானல்

நீர் ததும்பும் பாலையாய்..! கானல்

நீர் ததும்பும் பாலையில் மகரமாய் "நான்"!

இயங்காத கடிகாரம்..!

இயங்காத கடிகாரம் - நேரத்தை நினைவுபடுத்தியது..!

என் வாழ்வின் தருணங்களில்

நீ வந்து போன நிமிடங்களை மட்டும்

மீண்டும் மீண்டும் சுற்றி வந்து..

மோதிப்பார்ப்போம் வா..!

சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்..!

சரிந்தே அமர்வது எவன் வழக்கம்..!?

மோதிப்பார்ப்போம் வா - இந்த

பூமிப்பந்தும் கையடக்கம்..!

மடமை-2

யாருடனோ பேசிவிட்டு

புன்னகையோடு திரும்பினாள் -

எதேச்சையாய் எதிர்பட்டான் இவன்..!

சிரித்தாள் தனைப்பார்த்தே என்று

சில நாட்கள் மகிழ்வாய் நகரும்

இவனுக்கு…!!! அட மடமையே..!

அட..!

சாலையோரம் நடந்து செல்கையில்

ஆர்வமாய் விளையாடும் குழந்தைகள்..!

சட்டென ஏதோ சிறு கருத்து வேறுபாடு எழ

ஒவ்வொரு பிள்ளையும் ஒருவிதமாய்

சுவாரஸ்யமாய் விளக்கம் கொடுத்துக்கொண்டனர்..!

உண்மையறிந்தும் புன்னகைத்து நகர்ந்தேன்.

எனைக்கண்ட ஒரு குழந்தை ஒரு குறுஞ்சிரிப்பு செய்தான்..!

சுவாரஸ்யமாய் வாழ்க்கை..! அட இது சுகமடா..!

உன்னருகில்

நா குழறியது..!

இதயம் படபடத்தது..!

கண்கள் மாறி மாறி இருண்டும் பிரகாசித்தும்..

நேரம் நிற்கிறதா? இல்லை நகர்கிறதா

எனப் புரியவில்லை..! இத்தனையும்

பசி மயக்கமல்ல, ஏதோ பிணியுமல்ல..

உன்னருகில் நான்நெருங்க..

என்னில் வந்து போன அறிகுறிகள்!

ஏக்கம்

ஏக்கத்தோடுதான் கழிகின்றன பொழுதுகள்..!

உன்னோடு பகிரப்படாத உணவு

இன்னுமொரு முறை உண்ணப்படுகிறது..!

எந்திரமாய் உடல் உட்கொள்ள….

உண்ணாத மனம் - ஏக்கத்தோடு..!

மடமை

இன்று "இந்த கிழமை" என்று சொல்வது போன்ற அப்பட்டமான வாக்கியங்கள் மட்டும் தான் பரிமாறிக்கொள்கிறேன் உன்னோடு..! - இருந்தும் ஏதோ தத்துவம் சொன்னதாய் குதிக்குதென் இதயம்..!

இந்த மடமைக்கு மருந்துண்டா சொல்?!

நமக்குள்ளான நெருக்கம்!

விளக்குகள் அணைக்கப்பட்டன..!

என்னருகே நீ..! - கொஞ்சமாய்

மஞ்சளாய் தூரத்து வெளிச்சம்..!

நாம் விழித்து விதவிதமாய் கதைக்க..

உறங்கிய நேரம் விடிந்து விழிக்கையில்..

உணர்கிறோம் நமக்குள்ளான நெருக்கம்!

சொர்க்கம்

மழை விட்ட நேரம்..!

மரங்கள் குளித்து மண்ணைக் குளிப்பாட்டிய தருணம்..!

வேயெல்லாம் நனைந்து காற்றைக் குளிர்விக்கும் காடு..!

என்தோளில் நீ சாய..சலனமில்லா நடையில் நாம்..!

சொர்க்கம் என்று இதைத்தான் சொல்வார்களோ?!

மழலை

கண்ட ஒரு மழலை முகம்

கவிழ தந்த ஒரு குறுஞ்சிரிப்பும்

குறுகுறு கள்ளப் பார்வையும்

காண்கையில் அறிகிறேன்

அழகுடை இவ்வுலகை..!

Tuesday, February 10, 2009

சிநேகம் தெரியுதடி..!

இதற்கு முன்னே பார்த்ததே இல்லை

என்பது போல் என்னை கடந்து விட்டு,

கடந்த பின் "களுக்" கென்று சிரிக்கையில்

தெரியுதடி உனக்கும் எனக்குமான சிநேகம்!


மஞ்சத்தில் உறங்கும் என்னவளின்

முகத்தை சுடுவானோ அம்மாலைச்

சூரியன் என்று மெல்ல வந்துஜன்னலின்

திரை நகர்த்துகையில் தெள்ளமாய்

தெரியுதடி நமக்கிடையேயான சிநேகம்!


இந்தக் கேள்விக்கு இந்த பதில் தான்

இவன் சொல்லுவான் என்று முன்னமே யூகித்து

அந்த பதிலையே நானும் சொல்லுகையில்

உள்ளூர மெல்லச் சிரித்துக் கொண்டே

கள்ளமாய் பார்க்கும் ஒரு பார்வையில் புரியுதடி

உனக்கும் எனக்கும் உள்ள சிநேகம்!


ஒருசிறு தவற்றுக்கு படுகோபமாய்

உன்முகம் வாடும்வரை திட்டிவிட்டு

மெல்லமாய் உன்முகம் கண்டு ரசிக்கையில்

செல்லமாய் "களுக்"கென்று சிரிக்கையில், நகைக்கையில்

தெரியுதடி நமக்குண்டான சிநேகம்!  


எத்தனையோ கேள்விகள்! விதவிதமாய்...

என்னைத்தவிர வேறு ஒருவன் இருக்கலாமோ? என்றறிய!

எல்லாவற்றுக்கும் சாமர்த்தியமாய் பதில் சொல்லி

என்னை ஏமாற்றி விட்டதாய் வரும் ஒரு உள்ளார்ந்த

சிரிப்பில் உதடுகள் துடித்து உனை காட்டிக்கொடுக்கும்

பொழுதுகளில் உணர்ந்தேனடி நமக்கான சிநேகத்தை!


கடற்கரையில் என் காலடிச்சுவடுகளில்

கால் பதித்து எனை தொடர்ந்தே வந்து

திடீரென்று எனைத் தள்ளி சிரித்து என்

மார்பில் விழுந்து சில நொடிகள் அசையாது

பார்க்கும் பார்வையில் தெரியுதடி

உனக்கும் எனக்குமான சிநேகம்!


எந்த நேரம் நான் எதை கேட்பேன்

என்பதை தெள்ளமாய் அறிந்து,

அந்த நேரம் அதை எடுத்துக்கொண்டு,

“ஐயோ! மறந்துவிட்டேனே!” என்று

சிறிதுநேரம் செல்லமாய் ஊடி, பின் அதை

அளித்து புன்னகைக்கையில், அறிந்தேனடி

என்மீதான உன் சிநேகத்தை!


திடீரென பின்னாலிருந்து கண்களை மூடிஎனை

திளைக்கச் செய்ய முயற்சித்து - எனை தொட்டதும்

நாணி மெல்ல நடுங்கி கள்ளமாய் உனை காட்டிக்

கொடுக்கும் கரங்களில் தெரியுதடி நம் சிநேகம்..!


பதுங்கியென் பின்னே வந்தென் கண்மூடுவாய்..!

உன் அசைவுகள் அறிவேன் உன் வாசமும் அறிவேன்..!

இருந்தும் தவறாய் இன்னொரு பெயரை உச்சரிப்பேன்..!

சிணுங்கி முன்வந்து ஊடிக் கிள்ளுகையில்.. வலி

தெரியவில்லை.. தெரிந்தது நம் சிநேகம்..!


காரணமில்லாத வம்புகள் செய்வாய்..!

கடுகடுவென வள்ளுவன் சொன்ன

சுடாஅச் சுடுசொல் சொல்வாய்..!

சொல்லி முடித்தென் உள்ளத்தாழம்

கள்ளமாய் அளக்கும் கண்களில்

தெரியுதடி கணக்கில்லா காதல்..!  


எல்லோரும் நடம் பயின்றனர்..

என்னவளும் நடம் பயின்றாள்..!

அவளருகில் நான் ஒதுங்கி

அழகின் அழகை ரசித்திருந்தேன்..!

மானென துள்ளும் ஒரு அசைவில்

தானொரு அடிகூடுதலாய் துள்ளி

மெல்ல தவறி மேனி திடுக்கிட

நல்ல நடிகையே நளினமாய் உன்

தூரிகைக்கரங்கள் என் தோள்களை

தொட்டதும் தெள்ளமாய் தெரிந்ததடி

உள்ளார்ந்த ஒரு சிநேகம்..!