Wednesday, December 29, 2010

சுடிதார் அணிய வேண்டாம்...!

"சுடிதார் அணிய வேண்டாம்" என்று 
சொல்லுங்கள் அவளிடம்..!
அடிக்கடி என்மனம் அடங்காமல்.. நான்படும் 
அவதியை அவள் அறியமாட்டாள்..!

Wednesday, December 15, 2010

என்னவளின் சிரிப்பொலி..!

எங்கேயோ கேட்டது.. என்னவளின் சிரிப்பொலி..!

இங்கே பறக்க யத்தனித்தன.. எனது இறக்கைகள்..!

வலியதெது?

நீர்ச்சுழலோ? வளிச்சுழலோ? வலியதெது? - என 
வியந்தவென்னை பலமுறை கொன்றும் பின் 
பிழைப்பித்தும் வலிமையை நிரூபித்தன..!
அவள் நினைவுகள்.... எனை மூழ்கடித்து...!!

Tuesday, December 7, 2010

புரிதலில்...

புரிதலில் தான் அமைதி ததும்பி வழிகிறது..! - உன் 
புரிதலுக்காய் இந்த பூமி திறந்து கிடக்கிறது..! - நீ 
தரும் காதலை நோக்கி நிதம் காத்துக் கிடக்கிறது..!

Tuesday, November 16, 2010

எப்படிச் சொன்னாலும் அழகாய்....

எனைக் கடுங்கோபம் கொள்ள வைத்த முதல் மழலை..!
என் மனதறிந்து திட்டித் தீர்க்க வைத்த என் முதல் பிழை..!
மறந்தும் மறக்க இயலாத மதுரமான என் முதல் கவிதை..!
இருந்தும் தூரமாய் இருக்கும் என் இதயத் திரை..! - இப்படி
எப்படிச் சொன்னாலும் அழகாய் இனிக்கும் நீ..! வாழிய..!

Tuesday, November 9, 2010

மழலையாய் நனைகிறாள் அவள்..!



மயக்குதே.. அந்த மாலை நேரத்து மழை..!
மழையில் மழலையாய் நனைகிறாள் அவள்..!
ஆவியை விடுகின்றன சோடிய விளக்குகள்..!
"இவள எனக்கில்லை" என்றழுது...!!
மஞ்சள் தூறல்கள் அவள்மேல் விழ..
இயற்கை தங்கக்கன்னம் இன்னும் பளபளக்கிறது..!!
அசையாது ரசிக்கும் என்னை அனுமதித்துப் பின்
மழையால் அடிக்கிறாள்.. அந்த மாயக்காரி..!
இன்னும் தெளியாமல் நான்...!!

Friday, October 29, 2010

சிவ-பிரம்மம் நீ..!

என் கனவுகளுக்கு மட்டுமல்ல... 
என் கவிதைகளுக்கும் பிரம்மா நீதான்..!
பின் கலைத்தெறியும் சிவனும் நீதான்..!

Thursday, October 28, 2010

தினம் தினம் போர்..!

தினம் தினம் போர்..! தினம் உயிர்ச்சேதம்..! 
ஒருநாள் அவள் நண்பனைக் கொல்கிறேன்..! 
மறுநாள் அவள் எதிரியைக் கொல்கிறேன்..! 
தினம் தினம் போர்..! எனக்குள்ளே..!

சூரியனடி நீ எனக்கு..

சூரியனடி நீ எனக்கு..! - நீ 
புன்னகைத்த கதிர்களால் என் 
புதுவிடியல் பிறக்குதடி..! - நீ 
கண்சிமிட்டும் பொழுதெலாம் 
கருமேகம் கடக்குதடி..!

யார்மேல் பழியிடுவது?!

யாரைக்குறை சொல்லுவது?
ஆழமான உள்ளத்தை உள்வைத்து 
வஞ்சித்த வனப்பான கண்களையா?
சிரிக்க சிரிக்க விழுந்து காட்டி
விழ வைத்த கன்னக்குழிகளையா?
உன்னில் எனைத்தள்ளி வீழ்த்தியதற்கு
யார்மேல் பழியிடுவது?!

Wednesday, October 20, 2010

அழகுத்திணை..!

"அழகு" என்று புதிதாய் ஒரு அகத்திணை..!
அவளும் அவள் நிமித்தமான அத்தனையும் .. அத்திணையில்...!!

Thursday, July 15, 2010

வானவில்லாய்..!

கண்டவரை மகிழ்வித்து.. காணச் 
சுவடும் இன்றி மறைவோம்...! - வானவில்லாய்..!

Monday, June 21, 2010

கனிவாய்த்தான் புன்னகைக்கிறாள்..!

கனவுபோல் தோன்று தத்தனையும்..!
கனத்த நெஞ்சம்..! கலங்கிய கண்கள்..!
ததும்பிய கண்ணீரோடு எனக் கடந்தவள்....
கனிவாய்த்தான் புன்னகைக்கிறாள்..!
ஒவ்வொரு கணமும்... என் நினைவுகளில்...!

Sunday, June 13, 2010

மழலையாய் நானும்.!

ஒரு மழலையோடு விளையாடிக் கொண்டே மழலையாய் நானும்.!

இப்படி இருந்தால்...

வாழ்க்கை சுவாரஸ்யமாய் இல்லாமல் வேறெப்படி இருக்கும்?

வாடா பறக்கலாம்..!

வாடா பறக்கலாம்..! வானம் அளக்கலாம்..!

மலையெனப் பட்டதெல்லாம் மடுவென்றாக்கலாம்..!

மலையோடு மடுக்களும் வென்று நமதாக்கலாம்..!

வன்சிறகு  விரியடா... எனக்கு வான்சகா ஆகடா..!

வாடா பறக்கலாம்..! வானம் அளக்கலாம்..!

மௌனமே..!

மௌனமே..! எனை கொள்ளை கொண்ட மௌனமே..!

மயங்கினேன் உன் மௌனத்துக்கும்...முகபாவங்களுக்கும்..!

வார்த்தைகளுக்கடங்கா வனப்பு..! - உன்வார்த்தைகளுக்கும்

வார்த்தைகள் அல்லாதவைக்கும்.... வாழிய அத்தனையும்..!

எனக்காக அழுத...

எனக்காக அழுத முதற்பெண்ணும் நீதான்..!

எனை அழவைத்த முதற்பெண்ணும் நீதான்..! 

உனக்காக என்செய்வேன் என விளங்காமல் நான்..!

உளமாற மீண்டும் "நன்றிகளும் வாழ்த்துகளும்"..!

இரவலனாக்கியும் சாதுவாய்..!

எனை இரவலனாக்கிய உன் காதலுக்கு நன்றி..! - என்தரம்

சாய்த்த உனை சாடவும் மனமில்லாத சாதுவாய் நான்..!

ஆயினும் வார்த்தைகள் தடுமாறும்..

ஆயிரம் எண்ணங்கள் அலைமோதும்..
அவளின் ஸ்பரிசம் நினைக்கையில்..
ஆயினும் வார்த்தைகள் தடுமாறும்..
எழுதிட நினைத்திடும் நொடிதனில்..
விண்ணின் அழகு தேவதை - அவள் 
மண்ணின் மொழியினில் அடங்குவளோ?!

Friday, April 30, 2010

நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!

நீ நிராகரித்த பொழுதுகள் - நிஜமல்லாதிருக்கட்டும் என ஒரு சிற்றாசை..!

நீ வாராத நாட்கள் - நிறமற்று கடந்ததோ என ஒரு பிரம்மை..!

நீ புன்னகைத்த பொழுதுகள் - நிரந்தரமாக நின்றிருக்க ஒரு விழைவு..!

நாம் சண்டையிட்ட கணங்கள் - சரிதையில் வரையப்பட்ட நற்சிற்பங்கள்..!

எப்படி பார்த்தாலும்... நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!

தயங்குவனோ?!

தனித்துக்கிடக்கிறேன்....! எல்லாம் இருந்தும்..!

இருந்தும் தயங்குவனோ?! - இதோ 

வீறுகொண்டு எழுகிறேன்..!

விண்ணும் இனி என்னகமே..!!

நீ கடக்கும்போதெல்லாம்...

நீ கடக்கும்போதெல்லாம் ஒருபாதி...

உன்னோடே போவதாலோ என்னவோ...

"ஏன் எப்படி இளைத்துவிட்டாய்?" என்று 

எல்லோரும் கேட்கிறார்கள்?

காதல் அறிகுறி..!

காதலுக்கான அத்தனை அறிகுறியும் இருந்தது..! 
"நமக்குள் ஒன்றும் இல்லை" என்று நீ சொல்வதைத் தவிர...

Sunday, April 25, 2010

கவிதையாய் திரும்பி முகம் காணுகையில்...

"போ..!" என்று பெருங்கோபத்தோடு சண்டையிட்டு பிரிந்தோம்..!
எதிரெதிரே பார்க்கும்போதெல்லாம் முகஞ்சுளித்து கடப்போம்..!
கடந்த அடுத்த நொடியில் கட்டுக்கடங்காமல் "களுக்"கென்று சிரித்து...
கவிதையாய் திரும்பி முகம் காணுகையில் தெரியுதடி...
கட்டுப்படுத்த முயன்று தோற்ற... சிநேகம்..!

Friday, April 23, 2010

"சோம்பேறி" ஆகிறேன்..!

மீண்டும் மீண்டும் "சோம்பேறி" ஆகிறேன்..!
உன்கரங்கள் என் காதுமடல் திருகும் என்பதால்....

அடடா பறக்கிறேன்..!

அடடா பறக்கிறேன்..! 
எனை நினைத்து நீ வடிக்கும் 
கவிதையும் அழகு..! 
எனைப் புதுவிதமாய் அழவைக்கும்
கோபமும் அருமை..!
எனக்கே எனைப்  புதிராக்கிய உன் 
கண்ணீரும் கூர்மை..!
உன்னால்.. "நீ இருக்கிறாய்" என்பதால்..
ஆம் நான் பறக்கிறேன் - மெல்ல 
என் சிறகுகள் விரிக்கிறேன்..!

Wednesday, April 21, 2010

மழையே நீ மறுமுறை வர...!!

கோடி முத்தங்களால் என்மேனி சிலிர்க்க வைத்தாய்..!

சத்தங்களோடு சந்தங்களோடு சட்டென மறைந்தாய்..!

நீவிட்டுச் சென்ற கடைசி எச்சிலும் காய்ந்துபோனதே..!

சூரியனைச் சாடுகிறேன்..! மழையே நீ மறுமுறை வர...!!

காதல் அவள் மேல்...

"காதல் அவள் மேல்" என்பதால்... 
கரைபுரள விடுவதா? வேண்டாம்..!! 
என்வெளிகள் இன்னும் கொஞ்சநாட்கள் 
இப்படியே சுதந்திரமாய் இருக்கட்டும்..!

Monday, April 19, 2010

மழையும் தான்..!

எதிர்பாராத போது வந்தென்னைத் தழுவி 
மகிழ்ச்சியில் நனைப்பது… நீ மட்டுமல்ல.... மழையும் தான்..!

மழைமுட்கள்..!

கோடி முட்கள் குத்தியும் புன்னகைப்பதா? 
இது என்ன முரண்பாடு?! - பாவம் விடுங்கள்..! 
அந்த மழைமுட்கள் என் அனுமதி பெற்றுவிட்டன..!

Wednesday, April 7, 2010

அழுவதில் மகிழ்வதா..?!

அழுவதில் மகிழ்வதா?

இது என்ன முரண்பாடு?!

ஆம்..! மகிழ்கிறேன்..!!

எனை அழ வைக்கவும் ஒருத்தி இருக்கிறாள் என்பதில்...

Thursday, April 1, 2010

நிலவோடு இல்லாத நிலவு..!

"இன்று அமாவாசை" என்றாள் அவள்.

"நிலவு என்னோடிருந்தால் உலகுக்கு அமாவாசைதானே..!" என்றேன் நான்.

"பௌர்ணமியும் வருமே?!" அவள் விளிக்க..

"அன்று, இருநிலவு சாத்தியம்..!" என்றேன் நான்.

"பொய்யுரைத்தல் அறமோ?!" என்றாள்.

"காதலால்..கவிதையாய்.. ஆம்" என்றேன் நான்.

புன்னகைத்து தோள் சாய்ந்தாள்..!

நிலவோடு.. இல்லாத நிலவை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தேன்..!

புன்னகைக்கையில் தெரியுதடி...

நண்பர்களோடு இயல்பாய் பேசிக்கொண்டிருப்பேன்..!

எதேச்சையாய் அவள் கடந்து போவாள்..! - சில நொடிகள்

ஏதோ ஓருலகம் சென்று சட்டென்று வருவேன் பூமிக்கு..!

கடைசியாய் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி...

நண்பர்களிடம் செல்ல அடிகள் வாங்கி புன்னகைப்பேன்..!

புன்னகைக்கையில் தெரியுதடி...

உனக்கும் எனக்குமான சிநேகம்..!

வாழ்க்கை அழகானது..!

வண்ணங்களற்று அர்த்தமற்று 
நீர்த்துக் கொண்டிருந்தது வாழ்க்கை..!
எண்ணங்களில் மெல்ல அவள் நுழைந்தாள்..!
கன்னக்குழி தெரிய புன்னகைத்தாள்..!
கள்ளமில்லா பிள்ளையெனப் பேசினாள்..!
கோடி நிறம்..! கோடி பொருள்..!
வாழ்க்கை அழகானது..! கோடி பொறும் என்றது..!
நன்றிகள் என் நல்லழகே..!

Sunday, March 21, 2010

இயற்கைக்கு நிகராய்?

ஒவ்வொரு நொடியும் சுகத்தை சுமந்து சிரிக்கும் 
இயற்கைக்கு நிகராய் இன்னொன்று உளதோ?!
இருந்தால் சொல்லுங்கள்..!
இந்த கணமே இயற்கையெய்திடத்  தயார்..!

"என்ன மாயம் செய்தாயடி?!"

ஓரப்பார்வை பார்த்தாய்..!
உணர்வுகளோடு விளையாடினாய்..!
ஹார்மோன்களில் நீச்சலடித்தாய்..!
கவிதையாய் பேசினாய்..!
கடைசியில் "ஒன்றுமில்லை" என்கிறாய்..!
இருந்தும் உன் மீது கோபம்கூட
"வரமாட்டேன்" என்று எனக்கு எதிரியாகிறது..!
"என்ன மாயம் செய்தாயடி?!"

எனது கடற்பயணங்களில்...

கடும் புயலும் கரடு முரடான சூழலும் கொண்ட 
எனது கடற்பயணங்களில்..... 
என்னோடு பயணிக்க யத்தனித்தாய்...! - உனை 
பாதுகாப்பான கரையிலேயே விட்டுவிட்டு விலகுகிறேன்..! 
"வலி எனக்கு வாடிக்கை"..!

Sunday, March 14, 2010

எனை நிராகரித்தவளுக்கு...

என்னை நிராகரித்த உன் காதலுக்கு நன்றி..!
உனையன்றி மண்ணில் வேறெவளும் இந்த 
மகத்தான உணர்வுகளைத் தந்திருக்க முடியாது..!

உனை வருத்தினேனோ?

"உனை வருத்தினேனோ?" என எண்ணும்
ஒவ்வொரு நொடியும்.. 
யுகமென நீளும்..!
முள்ளென பாயும்..! 
"உள்ளேனோ?" என எனை மாய்க்கும்..! 
மன்னிப்பாயா? மண்வந்த தேவதையே..!?!

வெயில் கூட அழகாய்...

வெயில் கூட அழகாய்த் தெரிகிறது..!
கதிரெலாம் மழையெனச் சரிகிறது..!
வெளிச்சம் என்மேல் மலராய் விழுகிறது..!
அனிச்சம் அவள் கடந்து செல்லும் கணங்களில்...

Sunday, February 21, 2010

நிலவில் நீரும் உண்டு..!

"பிறைநிலவு உருகுகிறது..!"

"நிலவில் நீரும் உண்டு..!"

"அவள் நெற்றியில் வியர்வைத்துளிகள்..!"

- தமிழில் இது "ஒருபொருட்பன்மொழி".

Friday, February 19, 2010

நோகடித்தேனா?

"நோகடித்தேனா? நோகடித்தேனா?" என்று அடிக்கடி கேட்கிறாள்..!
அவள் தரும் வலியெல்லாம் சுகமாய் இருக்கும்போது...
"ஆம்" என்று எப்படிச் சொல்வேன்...?! சொல்லுங்கள்..!?!

ஒருத்தி வருவாள்..!

ஒருத்தி வருவாள்..! எனை புரட்டிப் போட்டு 
அத்தனைக்கும் புது அர்த்தம் தருவாள்..!
எனைத்தேடித் தோற்று அவளிடம் சரணடைவேன்..!

Tuesday, February 16, 2010

இன்னும் காதல் வயப்பட்டிருக்கிறேன்...!

எத்தனை முறை மறுத்தும்...
அடிக்கடி கண்முன் வந்து..எனை
நானே அறியாமல் புன்னகைக்க 
வைக்கும் அவள் முகம் சொன்னது..
நான் இன்னும் காதல் வயப்பட்டிருக்கிறேன் என்று..!

விழியுளியாலே...!

கல்இதயம் கொண்டிருந்தேன் யான்..!

விழிவழி வந்தாள் விழியுளி கொண்டு..

ஒலிஒளி எழவே அவளுறு செய்தாள்..!

இனிஇனி என்செய்வேன் யான்

உனை மறவென்றால்... சொல்..!

தோற்றலும் சுகமடி...!

படுசுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டிருப்போம்..!

வேண்டுமென்றே தோற்பேன்..! உணர்ந்து புன்னகைப்பாய்..!

கள்ளப்பார்வை பார்ப்பாய்..! அத்தனையும் கலைத்துவிட்டு..

"ஏனடா" என்றொரு பார்வை பார்ப்பாய்..! - "உன்னிடத்தில்

தோற்றலும் சுகமடி" என்பேன் பார்வையால்...

புன்னகைத்து அருகே வந்து.. பூரித்து தோள்சாய்வாய்..!

Tuesday, February 2, 2010

நானும் மழலையாவேன்..!

சிறுபிள்ளைத்தனமாய் விளையாடுவாய்..!

பதிலுக்கு நானும் மழலையாவேன்..! - ஆடி 

முடித்ததும் ஆழமாய் ஒரு பார்வை..! - அது

சிறக்க உள்ளார்ந்த ஒரு புன்னகை..!

தந்திடும் கணத்தினில் தெரியுதடி 

உன் கண்களில் நம் சிநேகம்..!

Sunday, January 31, 2010

புதிராய் நீயிருந்தால்...

பனியருகே சூரியன்.. பனி உருகவில்லை..!

நிலவு உருகி நீராய் விழுந்தது பனியில்..!

இத்தனை அழகாய்..நித்தமும் புதிராய்..

நீயிருந்தால்... என்னவளே உனை

காதலிக்காமல் இருப்பது எப்படி?

Friday, January 22, 2010

நீ வராத நாட்களில்....!

பார்ப்பேன் என எதிர்பார்க்கும் சில தினங்களில்...

பார்க்க இயலாது போகும் சில பொழுதுகளில்...

"வலியோ" எனும்படியாய் உணரும் சில நொடிகளில்...

தெயரியுதடி உனக்கும் எனக்குமான சிநேகம்..!!

Friday, January 8, 2010

மலரொடு மலரென...

"மலரிடை மலரொடு மலரென - முக

மலர்வுடன் மலருடை மலர்க்கரம் நீட்டினாள்"

"என்னவளை மலர்ப்பூங்காவில் சந்தித்தேன்"

என்பதை இப்படியும் சொல்லலாம்..!

Wednesday, January 6, 2010

எதற்கேனும் ஏங்குவனோ கேளாய்?!

தெளிந்தநன் மனம்..! தேறிய பெருந்தோள்கள்..!

கனிந்த உளம் கொள கள்ளமில்லா புன்னகை..!

துணிவினில் தோய்த்த துயரில்லா உள்ளம்..!

இத்தனையும் என்னகத்திருக்க எதற்கேனும்

ஏங்குவனோ கேளாய்என் கண்மணியே..!

தனிமையில் அழுகிறேன்..!

வலி தந்ததோ..?! நிவாரணமானதோ?!

புரியாமலே உதிர்க்கப்படுகின்றன 

கண்ணீர்துளிகள் சில... தனிமையில்..!

உதிர்ந்த துளிகளிலும் கூட...

உதிராமல் புன்னகைக்கும் அவளும்...

அவள் நினைவுகளும் வாழிய..!!

புயலடி நீ எனக்கு..!

கடும் பாதிப்பு..!! பின் புயல் கரைகடந்தது..! 

நீ கடந்து சென்ற என் இதயத் தெருக்களில் 

பெண்களுக்கு ஊரடங்கு உத்தரவு..!

இன்னொரு புயலுக்கு பயந்து...!!

காதலால் நீராடுகையில்..!

நீரோடை தகித்ததோ?! நின்தேகம் தகித்ததோ?!

நாமிருவர் நீராடுகையில்....காதலால்!

காமத்தில் கொள்ள இது புறத்திணை அல்ல..!

அகத்தில் கொள்ளுங்கள் இது காதலால்..ஆதலால்..!!