Wednesday, May 30, 2007

கண நேரம்..!

கண நேர சலனம்..
ஒரு உயிர் ஜனித்தது..! என் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.!
கண நேர தாமதம்..
ஒரு உயிர் பிழைத்தது. .! என் வழியில் ஓர் எறும்பு..!

Wednesday, May 23, 2007

வானமே கர்வப்படாதே..!

என் சிறகுகள் சிறியவை தான்..!
வானமே கர்வப்படாதே..! - என்
ஆயுளுக்குள் உனை அளந்து காட்டுவேன்..!

Wednesday, May 16, 2007

பெண்டிரும் கயல்நிகரே..!!

(பெண்களும் மீன்களுக்கு ஒப்பாகும் என சிலேடையில் கூறல்..! )

அலையாட புறஞ்சடையும் நீராட வழுவழுப்பும்
சலசலத்த வளையிருப்பும் நடனத்து தீண்டுதலும்
சதையுண்ணுஞ் சாதிக்கே நாண்சேர உணவாகி
கார் அகல பசலையுஞ் சுமக்குமெம் கெண்டைவிழிப்
பெண்டிரும் கயல்நிகரே..!!

பொருள்:
மீன்
: அலைபோல ஆடும் வாலிருக்கும், நீரில் ஆடி வழுவழுக்கும், சலசலப்புடன் வளைகளில் இருக்கும், நாம் தொடும்பொழுது துள்ளி நடனமாடும், மாமிசம் உண்பவர்களுக்கு உணவாகும். கார்காலம் நீங்கி வாடை வரும்பொழுது ஒருவித பசலை போன்ற நோயுறும். பெண்ணின் கண் போன்றது மீன்.

பெண்: அலைபோல ஆடும் சடையுடனிருப்பாள், பூப்படைந்து பூப்பு நீராடுவாள், பருவத்தில் வழுவழுப்பான தேகம் கொண்ட அவளை தலைவன் தீண்டும் பொழுது, வெட்கத்தில் நடனமாய் நெளிவாள். சதையுண்ணும் - பெண்ணுடல் சுகிக்கும் இனமாகிய தலைவனுக்கு விருந்தாகுவாள். கூடல் கார்கால நிகழ்வு. கூடல் நீங்கி தலைவனை பிரிகையில் பிரிவுத்துயரால் நெற்றியில் பசலை நோய் வரும். மீன் போன்ற கண்ணுடையவள்.