Friday, April 30, 2010

நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!

நீ நிராகரித்த பொழுதுகள் - நிஜமல்லாதிருக்கட்டும் என ஒரு சிற்றாசை..!

நீ வாராத நாட்கள் - நிறமற்று கடந்ததோ என ஒரு பிரம்மை..!

நீ புன்னகைத்த பொழுதுகள் - நிரந்தரமாக நின்றிருக்க ஒரு விழைவு..!

நாம் சண்டையிட்ட கணங்கள் - சரிதையில் வரையப்பட்ட நற்சிற்பங்கள்..!

எப்படி பார்த்தாலும்... நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!

தயங்குவனோ?!

தனித்துக்கிடக்கிறேன்....! எல்லாம் இருந்தும்..!

இருந்தும் தயங்குவனோ?! - இதோ 

வீறுகொண்டு எழுகிறேன்..!

விண்ணும் இனி என்னகமே..!!

நீ கடக்கும்போதெல்லாம்...

நீ கடக்கும்போதெல்லாம் ஒருபாதி...

உன்னோடே போவதாலோ என்னவோ...

"ஏன் எப்படி இளைத்துவிட்டாய்?" என்று 

எல்லோரும் கேட்கிறார்கள்?

காதல் அறிகுறி..!

காதலுக்கான அத்தனை அறிகுறியும் இருந்தது..! 
"நமக்குள் ஒன்றும் இல்லை" என்று நீ சொல்வதைத் தவிர...

Sunday, April 25, 2010

கவிதையாய் திரும்பி முகம் காணுகையில்...

"போ..!" என்று பெருங்கோபத்தோடு சண்டையிட்டு பிரிந்தோம்..!
எதிரெதிரே பார்க்கும்போதெல்லாம் முகஞ்சுளித்து கடப்போம்..!
கடந்த அடுத்த நொடியில் கட்டுக்கடங்காமல் "களுக்"கென்று சிரித்து...
கவிதையாய் திரும்பி முகம் காணுகையில் தெரியுதடி...
கட்டுப்படுத்த முயன்று தோற்ற... சிநேகம்..!

Friday, April 23, 2010

"சோம்பேறி" ஆகிறேன்..!

மீண்டும் மீண்டும் "சோம்பேறி" ஆகிறேன்..!
உன்கரங்கள் என் காதுமடல் திருகும் என்பதால்....

அடடா பறக்கிறேன்..!

அடடா பறக்கிறேன்..! 
எனை நினைத்து நீ வடிக்கும் 
கவிதையும் அழகு..! 
எனைப் புதுவிதமாய் அழவைக்கும்
கோபமும் அருமை..!
எனக்கே எனைப்  புதிராக்கிய உன் 
கண்ணீரும் கூர்மை..!
உன்னால்.. "நீ இருக்கிறாய்" என்பதால்..
ஆம் நான் பறக்கிறேன் - மெல்ல 
என் சிறகுகள் விரிக்கிறேன்..!

Wednesday, April 21, 2010

மழையே நீ மறுமுறை வர...!!

கோடி முத்தங்களால் என்மேனி சிலிர்க்க வைத்தாய்..!

சத்தங்களோடு சந்தங்களோடு சட்டென மறைந்தாய்..!

நீவிட்டுச் சென்ற கடைசி எச்சிலும் காய்ந்துபோனதே..!

சூரியனைச் சாடுகிறேன்..! மழையே நீ மறுமுறை வர...!!

காதல் அவள் மேல்...

"காதல் அவள் மேல்" என்பதால்... 
கரைபுரள விடுவதா? வேண்டாம்..!! 
என்வெளிகள் இன்னும் கொஞ்சநாட்கள் 
இப்படியே சுதந்திரமாய் இருக்கட்டும்..!

Monday, April 19, 2010

மழையும் தான்..!

எதிர்பாராத போது வந்தென்னைத் தழுவி 
மகிழ்ச்சியில் நனைப்பது… நீ மட்டுமல்ல.... மழையும் தான்..!

மழைமுட்கள்..!

கோடி முட்கள் குத்தியும் புன்னகைப்பதா? 
இது என்ன முரண்பாடு?! - பாவம் விடுங்கள்..! 
அந்த மழைமுட்கள் என் அனுமதி பெற்றுவிட்டன..!

Wednesday, April 7, 2010

அழுவதில் மகிழ்வதா..?!

அழுவதில் மகிழ்வதா?

இது என்ன முரண்பாடு?!

ஆம்..! மகிழ்கிறேன்..!!

எனை அழ வைக்கவும் ஒருத்தி இருக்கிறாள் என்பதில்...

Thursday, April 1, 2010

நிலவோடு இல்லாத நிலவு..!

"இன்று அமாவாசை" என்றாள் அவள்.

"நிலவு என்னோடிருந்தால் உலகுக்கு அமாவாசைதானே..!" என்றேன் நான்.

"பௌர்ணமியும் வருமே?!" அவள் விளிக்க..

"அன்று, இருநிலவு சாத்தியம்..!" என்றேன் நான்.

"பொய்யுரைத்தல் அறமோ?!" என்றாள்.

"காதலால்..கவிதையாய்.. ஆம்" என்றேன் நான்.

புன்னகைத்து தோள் சாய்ந்தாள்..!

நிலவோடு.. இல்லாத நிலவை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தேன்..!

புன்னகைக்கையில் தெரியுதடி...

நண்பர்களோடு இயல்பாய் பேசிக்கொண்டிருப்பேன்..!

எதேச்சையாய் அவள் கடந்து போவாள்..! - சில நொடிகள்

ஏதோ ஓருலகம் சென்று சட்டென்று வருவேன் பூமிக்கு..!

கடைசியாய் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி...

நண்பர்களிடம் செல்ல அடிகள் வாங்கி புன்னகைப்பேன்..!

புன்னகைக்கையில் தெரியுதடி...

உனக்கும் எனக்குமான சிநேகம்..!

வாழ்க்கை அழகானது..!

வண்ணங்களற்று அர்த்தமற்று 
நீர்த்துக் கொண்டிருந்தது வாழ்க்கை..!
எண்ணங்களில் மெல்ல அவள் நுழைந்தாள்..!
கன்னக்குழி தெரிய புன்னகைத்தாள்..!
கள்ளமில்லா பிள்ளையெனப் பேசினாள்..!
கோடி நிறம்..! கோடி பொருள்..!
வாழ்க்கை அழகானது..! கோடி பொறும் என்றது..!
நன்றிகள் என் நல்லழகே..!